இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி சரித்திரம் வாய்ந்தது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது என முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.



கோவை:


முதலமைச்சர் பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சரித்திரம் வாய்ந்த வெற்றி கிடைத்துள்ளது. குடிமராமத்து போன்ற சிறப்பு வாய்ந்த மக்கள் நல திட்டங்களை அதிமுக தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.


தி.மு.க. அளித்த பொய்யான வாக்குறுதிகள் இந்த தேர்தலில் எடுபடவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் தமிழக அரசு தலையிட முடியாது. உள்ளாட்சி தேர்தலிலும் இந்த வெற்றி தொடரும்.


டெங்குவை ஒழிக்க பொதுமக்கள் தாங்களாக முன்வந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசுடன் சேர்ந்து மக்களும் உதவ வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.