தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள்: ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழில் அதிபர்களிடம் விளக்கி கூறினார்.





சிகாகோ:


தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அரசு முறை பயணமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையிலிருந்து சிகாகோ நகருக்கு சென்ற அவர் அங்கு கடந்த 3 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரை வரவேற்று பாராட்டி விருதுகளை வழங்கி் வருகின்றன.


மகாத்மா காந்தி விருது


அரசுமுறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெபர்வல்லியில் உள்ள மூத்த குடிமகன்களுக்கான ''மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ்'' மையத்தின் சார்பில், தேசத்தந்தை அண்ணல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ''மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்'' பதக்கம் வழங்கப்பட்டது.


பதக்கத்தினை வழங்கிய 86 வயதான பிரதாப்சிங், துணை முதலமைச்சர் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமாருக்கு மகாத்மா காந்தி சக்ரா மற்றும் பாக்கெட் கடிகாரத்தை நினைவு பரிசாக வழங்கினார். இந்நிகழ்வின் போது உலக தமிழ் இளைஞர் பேரவை தலைவர் டாக்டர். விஜய பிரபாகர், மெட்ரோபாலிட்டன் ஏசியா பேமிலி சர்வீசஸ் மையத்தின் நிறுவனர் சந்தோஷ்குமார் மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தொழில் அதிபர்களுடன் சந்திப்பு


இதைத் தொடர்ந்து சிகாகோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.


தொழில் முதலீடு செய்ய தமிழகம் உகந்த மாநிலம் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகை, மானியம் ஆகியவற்றை குறிப்பிட்டார். எனவே புதிய தொழில் முதலீடு செய்ய வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி சுதாகர் தலேலா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், தமிழக நிதித் துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன், சிகாகோ தமிழ் தொழில் முனைவோர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.


இன்று ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ மேயர் இல்லினாய்ஸ், ஆளுனர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.


இந்திய – அமெரிக்க வர்த்தக கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவில் உள்ள தமிழ் தொழில் அதிபர்கள் சார்பாக நடத்தப்படும் வட்ட மேஜை கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்.


சிகாகோ நகரில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை வாஷிங்டன் டிசி செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு 14–ந் தேதி ஹூஸ்டன் நகர் செல்கிறார்.


16–ந் தேதி நியூயார்க் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 17–ந் தேதி தமிழகம் திரும்புகிறார்.