டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



சென்னை சாலிகிராமத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தெலங்கானா ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தித்ததாக கூறினார்.


நாங்குநேரி ,விக்கிரவாண்டி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.


மேகதாது அணைக்கட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்த பிரச்சனையில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது என்றார். மேலும் மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய முதலமைச்சர், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடி உரிய சிகிச்சை பெற வேண்டுமென்றார்.


சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும், ஆந்திரா, தெலங்கானாவிலும் டெங்கு காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.